அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் எனவும் என்னை பொருத்தவரை முருகனை எப்படி கடவுளாக பார்க்கிறேனோ அதேபோல்தான் அம்பேத்கரையும் பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.
கோவைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் கேரம் விளையாட்டில் வென்ற காசிமாவுக்கு அறிவித்ததாக செய்தி பார்த்தேன், அது உண்மையாக இருந்தால் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குகேஷின் சாதனை மிகப்பெரிய சாதனை. 500க்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி உள்ளார் கிரிக்கெட் சாம்பியன் அஸ்வின். அவருக்கும் இதேபோல தமிழக அரசு ஒரு நல்ல பெரிய விழாவை எடுத்து நடத்தி காட்ட வேண்டும். அஸ்வினை பொருத்தவரை பெரும் சாதனை படைத்தவர். அவரையும் பெரிய அளவில் கௌரவப்படுத்த வேண்டும் என்பது கோரிக்கை.
உள்துறை அமைச்சர் தவறாக எதுவும் பேசவில்லை. எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறீர்கள், அவரை தலைவராக கொண்டு செயல்படுகிறீர்களா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதிர்க்கட்சி நண்பர்கள் இதை தேவையில்லாத விவாத பொருளாக்குகிறார்கள். என்னை பொருத்தவரை முருகனை எப்படி கடவுளாக பார்க்கிறேனோ அதேபோல்தான் அம்பேத்கரையும் பார்க்கிறேன். அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக்கொண்டு அரசியல் செய்கிறீர்களா என்று கேட்டால் நான் செய்கிறேன், ஆனால் அவர் பெயரை உச்சரிக்கும் அனைத்துக் கட்சிகளும் செய்கிறார்களா என்று தெரியவில்லை.
அம்பேத்கரை எப்படி காங்கிரஸ் கட்சி சிறுமைப்படுத்தியது, அவருக்கு பாரத ரத்னா விருது எதற்கு தாமதமாக 1980-இல் கொடுக்கப்பட்டது என்பதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள், இதை சொன்னால் அவருக்கு கௌரவப்படுத்தவதாக நினைத்துக் கொள்கிறோம். அம்பேத்கர் பாதையில் உண்மையாக நடக்கக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. அம்பேத்கரின் சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் வைத்து பேசுபவர்.
திமுகவை எதிர்த்தால் அவர்களுக்கு சங்கி என பட்டம் சூட்டுகிறார்கள். சங்கி என்பதற்கு நண்பன் என்று சீமான் ஒரு விளக்கம் கொடுத்தார். இன்று திமுகவை பொருத்தவரை யார் அவர்களை எதிர்த்தாலும் பாஜகவுடைய ஏ டீம், பி டீம் என்று சொல்வார்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் என் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்டார், கேள்வி கேட்டதாலே பாஜக என்று சொல்கிறீர்கள்.
நீங்கள் காங்கிரஸ் ஆதிக்கத்தை ஒரு சமூகம் மற்ற சமூகத்தை அடக்கி ஒடுக்குகிறது என்று பேசினீர்கள். அராஜகம், அட்டூழியம், மிரட்டுவது, பண்பாடு இல்லாமல் பேசுவது, ஏதாவது கேட்டால் சினிமா செய்தி பார்ப்பதில்லை என்று சொல்வது ஆணவத்தின் உச்சம்.
இன்று போதைப் பொருள்கள் கூடாரமாக தமிழகம் மாறி இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை, கஞ்சா உள்ளே வரும் பொழுது பல பிரச்னைகள் இருக்கிறது, தமிழ்நாடு முழுவதும் யாரோ ஒருவர் எங்கோ உயிரிழக்கிறார்.
திமுகவை பொறுத்தவரை மிகப் பெரிய தோல்வி அடைந்துவிட்டது. உண்மையான பிரச்னைகள் பேசப்படாமல் உள்ளது, அரசு இயந்திரம் செயலிழந்துள்ளது. அரசால் உருப்படியான ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை. மக்கள் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலினை பாஜக செல்ல குழந்தை என்று சொன்னது தொடர்பான கேள்விக்கு, ஜெயக்குமார் ஏதாவது பேசுவார். 2021 தேர்தலுக்கு முன் இவர்களை இவர்களே செல்லக் குழந்தை என்று சொல்லிக் கொள்கிறார்களா? தமிழகத்தில் யாராவது ஒருவரை திட்டிப் பேச வேண்டும் என்றால் பாஜகவுடன் இணைத்து பேசுகிறார்கள். எல்லா டீமிலும் நாங்கள்தான் இருப்போம் போல் உள்ளது. பேட்டிங்கும் நாங்கள்தான் பவுலிங்கும் நாங்கள்தான். இன்று பாரதிய ஜனதா கட்சி அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். மிக முக்கியமாக பார்த்தால் யாராவது நம்மை கேள்வி கேட்டால் பாஜகவுடன் இணைத்து பேசிவிட்டால் நாம் தப்பித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். கட்டப் பஞ்சாயத்து 10 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆட்சியில் இருந்தவர்கள் யாருக்கும் நாங்கள் புண்ணியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.