அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி டீதான் விற்றுக் கொண்டிருந்திருப்பார்: சித்தராமையா!

அம்பேத்கர் பிறக்காவிட்டிருந்தால் பிரதமர் மோடி இன்னும் டீ தான் விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்றார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

அம்பேத்கர் குறித்து பாஜகவின் கருத்தை வெளிப்படையாக பேசியதற்கு உங்களை வாழ்த்துகிறேன். உங்களின் நேற்றைய பேச்சு எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. உங்கள் கட்சியின் உண்மையான மனநிலை எங்களுக்கு முன்னதாகவே தெரியும். அரசியல் சட்டத்தின் சிற்பிக்கு நீங்கள் அளித்த மரியாதையை தற்போது நாடே பார்த்துள்ளது. அவரது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் நாடாளுமன்றத்திலேயே நின்று, வெட்கமற்ற செயலை செய்ததற்கு வாழ்த்துகள்.

அம்பேத்கர் மீது அளவற்ற மரியாதை எனக்கு உண்டு, எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன என்று கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள். நாங்கள் ஏமாளிகள் அல்ல, உங்கள் வார்த்தைகளுக்கு பொறுப்பேற்று நாட்டு மக்களை எதிர்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அம்பேத்கர் ஃபேஷன் அல்ல உத்வேகம். நாங்கள் சுவாசிக்கும் வரை பூமியில் சூரியனும் சந்திரமும் இருக்கும் வரை அம்பேத்கரின் மரபு நிலைத்திருக்கும். அவரை நிராகரிக்க நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு வலிமையாக முன்னோக்கிச் செல்லும். உங்கள் அகந்தையைக் கண்டு துரோகிகள் கைதட்டியிருக்கலாம், ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அம்பேத்கரின் சமத்துவமும் கண்ணியமும் பெற்ற தேசத்தில் உள்ள கோடிக்கணக்கானோர் உங்களை கண்டிக்கிறார்கள்.

அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று முதல்வராகியிருக்க மாட்டேன், எனது கிராமத்தில் மாடு மேய்துக் கொண்டிருந்திருக்கலாம். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகி இருக்க மாட்டார். நாங்கள் மட்டுமல்ல, அம்பேத்கரின் பங்களிப்பு இல்லாமல் நீங்களும் உள்துறை அமைச்சராக இருக்க முடியாது. உங்கள் நண்பரும் பிரதமருமான நரேந்திர மோடி, இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார். அம்பேத்கரின் பார்வைதான் அனைவரையும் உயர்த்தியது.

அம்பேத்கர் மீதான உங்கள் வெறுப்பு, வரலாறு அறிந்தவர்களுக்கு புதிதல்ல. உங்கள் கருத்தியல் பெற்றோரான ஆர்எஸ்எஸ், அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய அரசியலமைப்பை நிராகரித்தது ஏன்? ஹெட்கேவார், கோல்வால்கர், சாவர்க்கர் போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அரசியல் சாசனத்திற்கு எதிரான அறிக்கைகளை வரலாற்று பதிவுகள் ஆவணப்படுத்துகின்றன. இந்த உண்மைகளை நீங்கள் மறைக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவற்றை அழிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உங்கள் கருத்துக்கள் நீண்ட கால ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் நீட்சியே.

உங்களை போன்றே பதிலளிக்கிறேன். உங்கள் கட்சியும், அதன் சித்தாந்த குடும்பமும் மோடி… மோடி… மோடி என்று கோஷம் போடும் ஃபேஷனை உருவாக்கி விட்டன. நீங்கள் மோடியின் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கலாம். ஏழு வாழ்நாள்களுக்கு மட்டுமல்ல, நூறு வாழ்நாள்களுக்கு. உங்கள் அதிகாரத்தின் மீது ஒட்டிக் கொண்டிருந்த பாவங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.