கேரள மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கேரள மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாக தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள மாநிலம் தொடர்பானம வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கேரள மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? கேரள மருத்துவக் கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்? என்றும் கேரள அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், கேரளாவிலிருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கான செலவுத் தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.