நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் பெரிய அளவில் நெகட்டிவ் சந்தித்த நிலையில் சிலர் சூர்யா குறித்து தவறாக பேசி வருவது பற்றி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் சில வருடங்களாகவே நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஜெய் பீம் திரைப்படத்தில் அவர் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய வெற்றி அடைந்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் உருவான சர்ச்சைகளின் காரணமாக இப்ப வரைக்கும் சூர்யாவை இணையத்தில் அதிகமானோர் விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது. சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் கங்குவா திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஹாலிவுட் சரித்திர பட ஸ்டைலில் இந்த படத்தின் மேக்கிங் உருவாக்கப்பட்டிருந்தது. அதுபோல பெரிய அளவில் பட்ஜெட்டிலும் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதற்கான பிரமோஷன்களில் சூர்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட போது அவர்கள் பேசியது இந்த படத்திற்கு வினையாக வந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.
சூர்யாவை பிடிக்காத குரூப் கங்கணம் கட்டிக்கொண்டு இந்த படத்தை காலி செய்ய வேண்டும் என்று வெறித்தனமாக இறங்கினார்கள். ட்விட்டரிலும் youtubeலயும் இந்த படத்தை விமர்சித்து அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. தியேட்டரில் இந்த திரைப்படம் வெளியான போது அதிகமான நெகட்டிவ் பெற்று வந்தாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் இடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த படத்திற்கு அதிகமான விமர்சனம் வந்ததால் ரசிகர்களிடம் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் போய்விட்டது. அதோடு அந்த படத்தில் சில குறைகளும் இருந்தது. குறிப்பாக சவுண்ட் எபெக்ட் காதை கிழிப்பது போல இருந்தது. அதிலும் அந்த படத்தின் கதைக்கு தகுந்த மாதிரி கேரக்டர்கள் கத்தி பேசிக் கொண்டிருக்கும் போது எஃபக்டிவ் சவுண்டும் அதிகமாக இருந்ததால் அது குறித்து அதிக ட்ரோல்கள் எழுந்தது.
அதுபோல ப்ரமோஷன் போது கூட ஞானவேல் ராஜா இந்த படம் கண்டிப்பாக 2 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என்று பேசி இருந்தார். ஆனால் அந்த படம் 100 கோடியை கூட தொடவில்லை. அதுபோல சூர்யாவின் மனைவி ஜோதிகா தன்னுடைய கணவருக்காக சப்போர்ட் செய்து பேசியது கூட இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.
இப்படியான நிலையில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி ஒரு பேட்டி ஒன்றில் பேசும் போது சினிமா உலகில் பார்த்து கஷ்டப்படும் விஷயம் என்ன என்று கேட்ட கேள்விக்கு, என்னுடைய தம்பி சூர்யாவுக்கு நடந்த கொடுமை என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது. சூர்யா ரொம்பவும் நல்லவன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அண்ணா.. என்று என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான். எவ்வளவோ ஏழை குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறான். அவனை குறி வைத்து தாக்கினார்கள். இது வன்மத்தின் உச்சம். சூர்யா ஒரு கேரக்டர் கொடுத்தால் அதுக்காக அவனுடைய முழு உழைப்பையும் போடுவான். இது போதுமா.. இது போதுமா என்று ஒவ்வொரு இடத்திலும் பார்த்து பார்த்து தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொள்வான். ஆனால் அவனை தொடர்ந்து சிலர் பழி வாங்குகிறார்கள். தாயின் மார்பை அறுத்து பசியாற முடியுமா? அதுவும் சினிமாவில் பிழைக்கும் கூட்டமே அவருக்கு எதிராக நின்றது தான் வேதனையும் உச்சமாக இருந்தது. ஆனால் என்னுடைய தம்பி சூர்யா பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான்.. வெற்றிகளை மீண்டும் தருவான்.. என்று அந்த பேட்டியில் கடும் கோபத்தோடு சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.