‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை திருச்சி சாலை, சுங்கம் அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் இரா.மோகன்(81). திமுகவைச் சேர்ந்த இவர், கடந்த 1980-84-ல் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், கடந்த 1989-1991 வரை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். திமுகவில், மாநில கொள்கை பரப்புச் செயலாளர், மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர், வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.20) மதியம் கோவை வந்தார். சுங்கம் கலைஞர் நகரில் உள்ள மறைந்த இரா.மோகன் வீட்டுக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மறைந்த இரா.மோகனின் மனைவி சுகுணா, மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறி துக்கம் விசாரித்தார். இந்நிகழ்வுகளின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மேயர் ரங்கநாயகி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் கூறியதாவது:-
திமுகவின் தூணாக விளங்கியவர் மறைந்த முன்னாள் எம்.பி இரா.மோகன். கட்சியில் கடைநிலையில் நிர்வாகியாக இருந்து உழைத்து, மக்களவை உறுப்பினராக வந்தார். அவரது மறைவு கோவைக்கு மட்டுமின்றி, திமுகவுக்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஈரோட்டில் கள ஆய்வு நடத்தி உள்ளேன். இன்னும் வேகமாக மக்கள் பணி செய்ய உத்வேகம் கிடைத்துள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு வைத்துள்ளோம். ஈரோட்டில் நடந்த கள ஆய்வுக்கு பின்னர், 200 இடங்களை தாண்டி வெற்றி கிடைக்கும் என்ற எண்ணம் எனக்கு கிடைத்துள்ளது.
ராகுல்காந்தி மீது செய்யப்பட்ட வழக்குப்பதிவை அவர் சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மீண்டும் திமுக கூட்டணி வசம் வரும். ஈரோடு கிழக்குத் தொகுதி யாருக்கு என்பது குறித்து இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். ‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்பது கொடுமையான முடிவு, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயலாகும்.
அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, இண்டியா கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். ஈரோடு இடைத்தேர்தலை இண்டியா கூட்டணி எதிர்கொள்ளும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நன்றாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.