அம்பேத்கரின் பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி: எச்.ராஜா!

அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவருடைய கருத்துகளை பதிவு செய்ய அனுமதி மறுத்து அவருடைய பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி என விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா.

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். கடவுளின் பெயரை பலமுறை சொன்னால் அவர்களுக்கு சொர்க்கத்தில் ஆவது இடம் கிடைக்கும்” என பேசினார். இதை அடுத்து அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அமித் ஷாவின் பேச்சை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்த பேச்சுக்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்தியா முழுவதும் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், அம்பேத்கருக்காக காங்கிரஸ் போராடுவது கசாப்புக்கடைக்காரன் ஜீவகாகாருண்யம் குறித்து உபதேசிப்பது போல இருக்கிறது என விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான எச்.ராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

1952 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட போது அன்றைய பிரதமர் திரு.ஜவகர்லால் நேரு அவர்கள் அண்ணலுக்கு எதிராக மும்பை வடக்கு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். காங்கிரஸூம், கம்யூனிஸ்டும் சேர்ந்து அண்ணலுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 75 ஆயிரம் வாக்குகள் எண்ணப்படாமலேயே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றைய தினம் புகார் தெரிவித்தார்.

பட்டியல் சமூக மக்களுக்கும், பழங்குடியினர் மக்களுக்கும் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், காஷ்மீருக்கு 370 வது சிறப்பு பிரிவு அந்தஸ்தை வாக்கு வங்கி அரசியலுக்காக ஜவகர்லால் நேரு தன்னிச்சையாக அறிவித்ததாலும், வெளியுறவுக் கொள்கைகளில் காங்கிரஸ் அரசு கடைபிடித்த தேச நலனுக்கு எதிரான, இறையாண்மைக்கு விரோதமான செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியாலும் ஜவகர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அதற்கான காரணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கவும் கோரினார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து உங்களுடைய கருத்துகளை எழுத்து பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என ஜவகர்லால் நேரு அவர்களின் அழுத்தத்தின் காரணமாக அன்றைய நாடாளுமன்ற சபாநாயகர் முலமாக அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதால் அக்டோபர் 11, 1951 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 4,000 வார்த்தைகள் கொண்ட ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்துவிட்டு அமைச்சரவையில் இருந்து வெளியேறினார். அந்த கடிதத்தில் தனக்கு இருந்த பிரச்னைகளை பட்டியலிட்டார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், பொருளாதாரம் குறித்த முக்கியமான விவாதங்களில் இருந்து தன்னை ஜவகர்லால் நேரு ஒதுக்கி வைத்ததாகவும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை இரண்டும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்து அதை சட்டமாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களையே நாடாளுமன்றத்தில் அவருடைய கருத்துகளை பதிவு செய்ய அனுமதி மறுத்து அவருடைய பேச்சுரிமைக்கே தடை விதித்த காங்கிரஸ் கட்சி இன்று ஜனநாயகம் குறித்து பேசுவது கசாப்புக்கடைக்காரன் ஜீவகாகாருண்யம் குறித்து உபதேசிப்பது போல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.