கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அண்ணாமலை கைது!

தமிழக அரசை கண்டித்து தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக, தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்காக பிணையில் வந்த எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து மறுநாள் அவரது உடல் உக்கடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக பூ மார்க்கெட் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி அளித்ததற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எஸ்.ஏ.பாஷா இறுதி ஊர்வலத்துக்கு அனுமதியளித்த காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில், கருப்பு தின பேரணி நடத்தப்படும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணிக் கூட்டம் இன்று நடந்தது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து பேசினார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை பேசியதைத் தொடர்ந்து, பாஜகவினர் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அங்கு நின்றிருந்த போலீஸார் அவர்களது ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக பேரணியில் பேசிய அண்ணாமலை, கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷாவை, ‘அப்பா’ என்று அழைத்த சீமான், பாஷா மரணத்துக்கு வீரவணக்கம் தெரிவித்த திருமாவளவன் ஆகியோரது செயல் ஓட்டுப்பிச்சை என கடுமையாக விமர்சித்தார்.