அமைச்சர் ரகுபதி போன்ற ஒட்டுண்ணிகளிடம் ஜாக்கிரதையாகவே இருங்கள் முதல்வர் ஸ்டாலின் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார் அமைச்சர் ரகுபதி. அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது. அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி. அ.தி.மு.க வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா? அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும்.
கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா? ஊதிய உயர்வு கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகள் போராட்டத்தில், ஆற்றில் மூழ்கி அவர்கள் இறக்கக் காரணமாய் இருந்த தீயசக்தி கருணாநிதியின் அரசுக்கு வால் பிடித்தும், இன்று அவர்கள் வாரிசுக்கு கால் அழுத்தி விடும் வேலையை செய்து கொண்டிருக்கும் ரகுபதிக்கு, அதிமுக ஆட்சி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
மாஞ்சோலை கொடூரத்தை மறுப்பதற்கு முன், இன்று சட்டப்பேரவைத் தலைவராக இருக்கும் அப்பாவு, “கருணாநிதி திட்டமிட்டு செய்த கலவரம் தான் மாஞ்சோலை கொடூரம்” என்று கூறிய காணொளி வாக்குமூலத்தை நூறு முறை ரகுபதி கேட்டுக்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பற்றி என்ன தவறாக பேசிவிட்டோம் என்று ஏகத்திற்கும் துள்ளிக் குதிக்கிறது இந்த கோபாலபுரத்து கொத்தடிமை? திமுக ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணங்கள் ரகுபதிக்கும், அவரின் தலைவரான ஸ்டாலினுக்கும் தெரியாதா? சென்னையில் நடந்த விக்னேஷ் மரணத்தில், சட்டமன்றத்திலேயே வாய் கூசாமல் பச்சைப்பொய் பேசியவர் தானே ஸ்டாலின்? அவரின் கொத்தடிமையான ரகுபதி சொல்வதை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்களா?
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய மாணவி ஒருவர், பலரால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான கொடுமை குறித்து ரகுபதியிடம் பதில் இருக்கிறதா? நேற்று ஒரு நாள் கொலைப் பட்டியலை அண்ணன் எடப்பாடியார் சொன்னதற்கே இவ்வளவு பொங்கும் இந்த கோபலபுரத்து கொத்தடிமைக்கு, தான் எக்ஸ்-தளத்தில் பதிவிடும் சமயத்தில் அதே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் கொடூரமாக நடைபெற்ற சட்ட மாணவர் கொலை குறித்து ஏதாவது தெரியுமா? ஒவ்வொரு முறையும் கொலை நடந்த பிறகு “கைது செய்துவிட்டோம்” என்று சொல்வது தான் திமுக ஆட்சி நடத்தும் லட்சணமா? மேலும் , பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடுர கொலையில், தானாக முன்வந்து சரணடைந்தவர்களை கைது செய்துவிட்டதாக கூச்சமே இல்லாமல் மார்தட்டிய அரசு தானே இந்த திமுக அரசு?
திருநெல்வேலி நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையில், விடியா திமுக அரசின் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, குற்றவாளிகளைப் பிடித்தது வழக்கறிஞர்கள் தான் என்பதை நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த பேட்டியை தமிழ்நாடே பார்த்துவிட்ட பிறகும், ரகுபதியை ஏவி இப்படி ஒரு அறிக்கையை விடுவதற்கு ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் மீது மாறாப் பற்றுடன், கொள்கைப் பிடிப்புடன், எல்லாக் காலங்களிலும் இந்த இயக்கத்தோடும் மக்களோடுமே இருந்த எங்கள் கழகத்தின் தொண்டர் தான் இன்றைக்கு இந்த இயக்கத்தின் காவலராக, தீயசக்தியின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மக்களுக்கான ஆட்சியை அமைப்பதற்கான திடமான தலைமையாகக் திகழும் மாட்சிமை பொருந்திய பொதுச்செயலாளராக இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தின் வாரிசு, அதுவும் ஆண் வாரிசு மட்டுமே தலைவராக முடியும் என்ற நிலையில் உள்ள தி.மு.கவின் ஏவல் கொத்தடிமைகளில் ஒன்றாக இருக்கும் ரகுபதிக்கு எங்களைப் பற்றிப் பேச எப்போதுமே அருகதை இல்லை. குடும்ப ஆட்சி நாட்டைக் கெடுக்கும்! ஒட்டுண்ணிகள் கட்சியைக் கெடுக்கும்! ஸ்டாலின் குடும்பத்தார் கால்களில் ஊர்ந்துகொண்டு இருக்கும் ஒட்டுண்ணியான ரகுபதி இத்தோடு நாவடக்காவிடின், மக்கள் துணையோடு அதிமுக அதற்குரிய பாடத்தைப் புகட்டும். ரகுபதி போன்ற ஒட்டுண்ணிகளிடம் நீங்களும் ஜாக்கிரதையாகவே இருங்கள் ஸ்டாலின் அவர்களே! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.