பொங்கல் அன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: கனிமொழி!

பொங்கல் பண்டிகையன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாற்றும் டிசம்பர் என இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. யுஜிசி நெட் தேர்வு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தேர்விற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 11 ஆம் தேதி வரை பெறப்பட்டன. நாடு முழுக்க பல ஆயிரம் பேர் இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 85 பாடங்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் கொண்டப்படும் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொங்கல் நாளன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளன்று தேர்வு நடத்தக் கூடாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து ஜனவரி 15, 16ல் யுஜிசி நெட் தேர்வு நடத்த திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.