கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா?: சீமான்!

திருப்போரூர் கோயில் உண்டியலில் ஐபோன் விழுந்த நிலையில் அதை தர மறுப்பது நியாயமற்றது, கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோனை தர மறுப்பது நியாயம் கிடையாது. அதே கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம். அவர் என்ன ஆரியப்படைத் தலைவரா? பணம் கொடுத்தால்தான் திமுகவினர் வேலை செய்வார்கள். ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி! அவர் எனது எதிரி அல்ல! திமுகதான் எனது எதிரி. பாஷா இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள சென்ற போது ஓட்டு பிச்சைக்காக நான் செல்வதாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் எனக்கு இதுவரை வாக்களித்தது இல்லை. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக திமுகவுக்கு வாக்களிப்பதை வைத்துள்ளார்கள். இறைதூதரே வந்து சீமானுக்கு ஓட்டு போடுங்கள், திமுகவுக்கு போடாதீங்கன்னு சொன்னா கூட , இந்த மக்கள் “நீங்கள் இறைதூதரே இல்லை”னுதான் சொல்வாங்க!. ஏன்னா நான் பாஜகவோட பி டீமாம்! சரி அப்போ ஏ டீம் யாரு, திமுகதானே.

அதிமுகவை கண்டு கூட திமுக, பயப்படுவதில்லை. என்னை பார்த்து தான் பயப்படுகிறது. இதுவரை இருந்ததிலேயே மிக மோசமான முதல்வர் ஸ்டாலின் தான். கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே? இதை கேட்டு தடுத்திருக்க வேண்டியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் 6 மாதங்கள் கழித்து உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் , 620 கிராம் வெள்ளி இருந்தது. இத்துடன் ஒரு செல்போனும் இருந்தது. இது யாருடையது என கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த போன், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது. இதுகுறித்து தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தினேஷ் திருப்போரூர் கோயிலுக்கு வந்து தனது போனை பெற்றுக் கொள்ளலாம் என தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வந்துள்ளார். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என கூறி போனை தர மறுத்துவிட்டனர். அந்த போனின் விலை ரூ 1.50 லட்சம் என்று கேட்டும் செல்போனை திருப்பி கொடுக்க கோயில் நிர்வாகமோ முடியவே முடியாது. வேண்டுமானால் உங்கள் போனில் இருக்கும் தரவுகளை எடுத்துக் கொண்டு போனை கொடுங்கள் என்றனராம். இதையடுத்து அந்த போனில் இருந்த போட்டோக்கள், கான்டாக்ட்கள், முக்கிய மெசேஜ்களை தினேஷ் எடுத்துக் கொண்டதும், போனை மறக்காமல் கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கிக் கொண்டனராம். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சாத்தியக்கூறுகள் இருந்தால் போனை திருப்பி தரலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சீமானும் செல்போன் விவகாரத்தில் விமர்சித்துள்ளார்.