எங்கள் தேச நலனுக்கும் உலகத்திற்கும் எது சரி என நினைப்பதை இந்தியா செய்யும். எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் செயல்படும். இந்தியாவின் விருப்பத்தின் மீது பிறர் எதேச்சதிகாரம் காட்டுவதை ஒரு போதும் பாரதம் அனுமதிக்காது என்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தங்களின் விருப்பத்தின் மீது பிற நாடுகள் எதேச்சதிகாரம் (வீட்டோ) காட்டுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:-
சுதந்திரம் என்பதை நடுநிலையுடன் ஒரு போதும் குழப்பிக்கொள்ளக் கூடாது. எங்கள் தேச நலனுக்கும் உலகத்திற்கும் எது சரி என நினைப்பதை இந்தியா செய்யும். எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் செயல்படும். இந்தியாவின் விருப்பத்தின் மீது பிறர் எதேச்சதிகாரம் காட்டுவதை ஒரு போதும் பாரதம் அனுமதிக்காது. இந்தியா ஒரு நாகரிக நாடாக உள்ளதால், விதிவிலக்கான தேசமாக உள்ளது. சர்வதேச அரங்கில் கலாசார வலிமையை முழுமையாக பயன்படுத்தும் போதுதான் வலிமை அதிகரிக்கும். வறுமை, பாகுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு எட்ட முடியும்.. இளைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை முழுமையாக தெரியப்படுத்துவது அவசியம், உலக அரங்கில் இந்தியா தனது திறனையும், அர்ப்பணிப்பையும் காட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஐக்கிய நாடுகள் அவையில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பு நாடாக உள்ளது. இந்தியா தற்காலிக உறுப்பு நாடாகவே உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே வீட்டோ அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தின் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் கட்டுப்படுத்த முடியும். 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில், 10 நாடுகள் தற்காலிக நாடுகளாக உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு மூலம் தற்காலிக உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்காலிக நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. ஐக்கிய நாடுகள் அவையில் சீர்திருத்தம் அவசியம் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், சீனா இதற்கு எதிராக உள்ளது. அதுபோக பல்வேறு விவகாரங்களில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய தீர்மானங்களையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.