மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை!

போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இது தொடர்பான விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருளை தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரில், போதைப்பொருள் கடத்தலில் மன்சூர் அலிகானின் மகனுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து ஜெ.நகர் காவல்துறையினர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கை கடந்த டிசம்பர் 4 ம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அம்பத்தூர் நீதிமன்றம், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து அலிகான் துக்ளக் ஜாமீன் வழங்க கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.