கோவையில் ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து சட்ட விரோதமாக துப்பாக்கி கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இவற்றை தடுப்பதற்கு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அப்படியும் கூட புதிது புதிதான முறையில் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
பீகார் மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு ரயில் மூலம் கள்ள துப்பாக்கி கடத்தி வருவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கள்ள துப்பாக்கி கடத்தி வந்தவர்களை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன்ராய் (வயது 23) மற்றும் அவரது நண்பரும் கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஶ்ரீ (வயது 23) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி சாலையில் உள்ள சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு ( வயது 22). கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஹரிஶ்ரீயின் நண்பர் ஆவார். இந்நிலையில் மணிகண்ட பிரபு ‘எனக்கு உடனடியாக ஒரு துப்பாக்கி வேண்டும்’ என்று ஹரியிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஹரி தனது பீகார் நண்பரான குந்தன்ராயை அணுகியுள்ளார். குந்தன்ராய் பீகாரைச் சேர்ந்தவர் என்றாலும் கோவையில் தான் தங்கியுள்ளார். அவர் பீகாரில் தனக்கு தெரிந்த ஒரு இடத்தில் துப்பாக்கி கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். இருவரும் ரயில் மூலம் பீகார் சென்று துப்பாக்கி வாங்கியுள்ளனர்.
கோவைக்கு திரும்பி வரும்போதுதான், காவல்துறை நடத்திய சோதனையில் அவர்கள் இரண்டு பேரும் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக மணிகண்ட பிரபு, ஹரிஶ்ரீ மற்றும் குந்தன்ராய் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டக்கள், ஒரு பை, மூன்று செல்போன்கள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர், அவர்கள் மூன்று பேரையும் பீளமேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் எதற்காக யாரிடமிருந்து துப்பாக்கி வாங்கினார்கள், அவர்களின் குற்ற பின்னணி என்ன, மேலும் இதன் பின்னணியில் இருப்பவார்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.