சென்னை அருகே விஷவாயு தாக்கி பலியான ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சென்னை மாதவரம் 3-வது மண்டலம் 28-வது வார்டுக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (வயது 26), ரவிக்குமார் (40) ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயன்றனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது, விஷவாயு தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்தார். இந்த நிலையில், பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் அவருக்கு உதவி புரிந்த சக தொழிலாளி ரவிக்குமாருக்கும் விஷவாயு தாக்கியது. இதில் அவர் மயங்கிக் கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து, உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளி நெல்சன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.