நடிகர் தனுஷின் 55-வது படத்தில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியான அமரன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தனுஷ் இயக்கிவரும் இட்லி கடை படத்தின் வேலைகள் முடிந்ததும் துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படமும் உண்மை சம்பவத்தைத் தழுவியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன், தனுஷும் ஸ்ருதிஹாசனும் 3 திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.