விடுதலை 2’ படத்தின் கடைசி ஷாட் வரை ஒன்றிப் போனேன்: தனுஷ்!

“முதல் ஷாட் தொடங்கி கடைசி ஷாட் வரை திரைப்படத்துடன் ஒன்றிப் போனேன்” என்று ‘விடுதலை பாகம் 2’ படத்தை வெகுவாக புகழ்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. டிசம்பர் 20-ல் ‘விடுதலை பாகம் 2’ திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், அனுராக் காஷ்யப் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படத்துக்கு வரவேற்பு கூடிக் கொண்டிருக்கிறது. வர்த்தக ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில், வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ படத்தைப் பார்த்துவிட்டு, தன் அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகர் தனுஷ். அதில், “ஒரு ‘ரா’ (Raw) தன்மையுன் ஈர்க்கத்தக்க படமாக இருக்கிறது ‘விடுதலை பாகம் 2’. முதல் ஷாட் தொடங்கி கடைசி ஷாட் வரை திரைப்படத்துடன் ஒன்றிப்போனேன். தலைசிறந்த திரைப் படைப்பாளரான வெற்றிமாறனின் மிகச் சிறந்த படைப்புதான் ‘விடுதலை பாகம் 2’.

இளையராஜாவின் இசையை ரசித்தேன். அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் குழுவினரும் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு அற்புதம். மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் ‘விடுதலை பாகம் 2’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாருக்கு வாழ்த்துகள். படக்குழுவினருக்கு என் அன்பினைப் பகிர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தனுஷ் கூறியுள்ளார்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ‘வாத்தியார்’ விஜய் சேதுபதியின் கதை விவரிக்கும் ‘விடுதலை பாகம் 2’, வெற்றிமாறனின் தத்துவார்த்த அரசியலை ஆழமாகப் பேசுகிறது என்று பாராட்டு விமர்சனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.