கல்வி தரத்தை மேம்படுத்தவே கட்டாய தேர்ச்சி ரத்து: அண்ணாமலை!

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தும்போது, தேர்தல் நடத்தை விதி பிரிவு 93 (2)-ல் மாற்றம் செய்து வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரித்து பேசுகின்றனர். இதுவரை அப்படி வழங்கப்பட்டதில்லை. இந்த திருத்தம் மூலம் அச்சமின்றி வாக்களிக்க முடியும்.

மேலும் 5, 8 வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி வழங்கப்படமாட்டாது என்பதற்கு தமிழக அரசு விரோதத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசை பொருத்தவரை கல்வி தரமாக வழங்கப்பட வேண்டும். என்சிஆர்டி, ஏசர் உள்ளிட்ட தரவுகளின்படி இதர தென்மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியிருக்கிறது. இதில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் மோடிக்கும், முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆருக்கும் இடையேயான ஒற்றுமை குறித்த எனது அறிக்கைக்கு அதிமுக தலைவர்களே தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் வேறு புதிய பிரச்சினையை கிளப்ப வேண்டாம் என ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு மதவாத சாயம் பூசும் திராவிட கட்சிகள் இதை ஏன் வரவேற்கவில்லை.

இது திமுகவுக்கு மைனாரிட்டி சீசன். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறுபான்மையினருக்கு செய்தது என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும். இதைவிட அதிகமாக தமிழகத்தில் செய்திருக்கிறோம் என முதல்வர் நிரூபிக்கட்டும். சாதிவாரி கணக்கை எடுத்து பகிர்ந்து கொடுப்பதை விடுத்து, சமுதாயத்துக்கு இடையே அடித்துக் கொள்ளும் சூழலை திமுக உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே மும்மொழிக் கொள்கை தான் இருந்திருக்கிறது. பிஎம்ஸ்ரீ பள்ளியை பெற்றுக் கொண்டு மூன்றாவது மொழியை தமிழக அரசு நிர்ணயித்திருக்க வேண்டும். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி உட்பட கொங்கு பகுதியில் இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவினர்தான். நான் இதுவரை வருமானவரித் துறைக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. பாஜக உட்கட்சி தேர்தல் பணிகள் ஜனவரி இறுதிக்குள் முடிவடையும். பெரியாரின் ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. அம்பேத்கரின் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என திருமாவளவன் போராட்டம் நடத்த வேண்டும்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரும் சினிமாவுக்கு சென்று தான் ஒரு நடிகன் என்று நிரூபித்தால் அது சண்டை போடுவதற்கான ஒரு வழி என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ரேவந்த் ரெட்டி தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். மக்களுக்கு சேவை செய்யத்தான் உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அல்லு அர்ஜுன் தன் மீது தவறு இருப்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்ட பிறகும் கூட அவரை துன்புறுத்துவது, சட்டப்பேரவையில் அவரது பெயரை குறிப்பிட்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தியேட்டருக்கு வந்தால் யாரேனும் உயிரிழப்பார்கள் என்பது அல்லு அர்ஜுனுக்கு தெரியுமா? இந்த விவகாரத்தில் அவரை பலிகடா ஆக்குவது நல்லதல்ல. சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஆனால் அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி பேசியதில் வெறுப்பை மட்டுமே நான் பார்க்கிறேன். அவரது வார்த்தைகளில் நடுநிலைமை இல்லை.

மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாகவும், மதுரை மாவட்ட சகோதர, சகோதரிகள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடிவெடுப்பதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்ததோடு, அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சுரங்க ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்துக்கு, உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், எப்போதும் தமிழக மக்கள் மற்றும் நமது விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே முடிவுகள் மேற்கொள்வார் என்பது, இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.