மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

இலங்கை கடற்படையினரால் மீனவர்களின் மீன்பிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் .

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க, மீனவர்களின் நலன் காக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தது அத்துமீறியச் செயலாகும். அதாவது தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேரையும், அவர்களது 2 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருக்கின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

இது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு, வருகிறது. இதனால் மீனவக்குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சத்தோடும், கவலையோடும் வாழ்கின்றனர்.

எனவே மத்திய அரசு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுகளையும் மீட்க உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழக அரசும் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.