எம்ஜிஆருக்கு முக ஸ்டாலின், விஜய் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? தமிழிசை சவுந்தரராஜன்!

பெரியார் நினைவு நாளில் மரியாதை செலுத்த தெரிந்த தவெக தலைவர் விஜய் மற்றும் முக ஸ்டாலினுக்கு எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதை தெரியவில்லையா என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக நிறுவனருமான டாக்டர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினா். இதுதவிர பல்வேறு கட்சி தலைவர்களும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினா். இதேபோல் ஈவேரா பெரியாருக்கும் இன்று நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர்கள் மரியாதை செலுத்தினா். தவெக தலைவர் விஜய், பெரியாரின் உருவப்படுத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில் பெரியாருக்கு மரியாதை செலுத்த தெரிந்த தவெக தலைவர் விஜய் மற்றும் முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆருக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டனரா என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தர ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..???

பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் திரு.விஜய் அவர்கள் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை..?. டெல்லியில்.. பிரதமர் அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா? இது ஒரு சாமானியனின் கேள்வி ? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.