முட்டாள்தனமான ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும்: சுப்பிரமணியசாமி!

ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்ட மாற்றம் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முட்டாள்தனமாக ஜிஎஸ்டியை கொண்டு வந்து இருக்காங்க. ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். நிர்மலா சீதாராமனுக்கு ஒன்னுமே தெரியாது என்று சாடியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் கட்சியின் தலைமை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், யூடியூப் விவாதங்களிலும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் சென்னை விமான நிலையம் வந்த சுப்பிரமணியன் சுவாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். சுப்பிரமணியன் சுவாமியிடம் பத்திரிகையாளர்கள், ‛‛நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ளது. அங்கு பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள். அம்பேத்கர் குறித்த அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக கூறப்படுவது, ராகுல் காந்தி தள்ளியதில் 2 பாஜக எம்பிக்களின் மண்டை உடைந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி சிரித்தபடி, ‛‛நாட்டில் இப்போது வேலையில்லாத திண்டாட்டம் நிறைய உள்ளது. சீனா நம் நாட்டுக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுகிறார்கள். அதுபற்றி யாருமே பேசுறது இல்லை. இது தலைமையின் தோல்வி. நாடாளுமன்றத்தில் அவர் இப்படி பேசினார். இவர் இப்படி பேசினார் என கூறுவதை தடுக்க கட்சியின் தலைவர்கள் தான் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் கட்டுப்பாடு இல்லை. அதுதான் பிரச்சனை’’ என்றார்.

இதையடுத்து ‛‛ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‛‛அதெல்லாம் இப்போதைக்கு வராது. கவலைப்படாதீர்கள்’’ என்று பதிலளித்தார்.

இந்த வேளையில் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வந்தது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, ‛‛ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும். முட்டாள்தனமாக கொண்டு வந்து இருக்காங்க. நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது. அதிகாரிகள் எல்லாவற்றையும் முடித்து எழுதி கொடுப்பார்கள். அதை தான் பேசுவார்’’ என்று கூறினார்.