மாநில குழந்தைகள் ஆணையம் செயல்படாமல் முடங்கி உள்ளது: கே.பாலகிருஷ்ணன்!

தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் முடங்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023-ம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்களும், 2024-ம் 1,640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக ஆர்டிஐ தெரிவிக்கிறது. குறிப்பாக ஈரோடு, திருநெல்வேலி, பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்காணிக்க வேண்டிய மாநில குழந்தைகள் ஆணையம் தலைவர் இல்லாமல் முடங்கி உள்ளது. இதனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளனர். எனவே, குழந்தை திருமணத்துக்கு எதிரான தற்போதைய சட்டங்களை வலுவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அளவிலான கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தவும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலான குழந்தை திருமணத் தடுப்பு குழுக்களை ஏற்படுத்தவும் வேண்டும். குழந்தைகள் ஆணையத்துக்கு உடனடியாக தலைவரை நியமிக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.