மாணவி பாலியல் வழக்கை சிபிஐ-​யிடம் ஒப்படைக்க வேண்டும்: எல்.முருகன்!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லையென்றால் சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

இந்திய பொருளாதாரத்தில் சினிமா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், ‘‘உலக ஆடியோ, காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு’’, இந்தியாவில் முதல்முறையாக 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழக பாஜக போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்றும் செயல்களில் ஈடுபட கூடாது.

இந்த வழக்கில் இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த முடியவில்லை என்றால், இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் மிகவும் வெட்கக்கேடானது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதே பாஜக தான். திருமாவளவன் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.