புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்து, 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை மக்கள் கொண்டாடுவார்கள். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, இந்து கோவில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும்.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதை ஒட்டி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆகம விதிகளை மீறி கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி உள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-
வரும் ஜனவரிம் 1 ஆம் தேதி ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு செய்யக் கூடாது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது விருந்துடன் கொண்டாடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குறித்து அதன் எப்.ஐ.ஆர் வெளியிட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வெளியிட்டதால் அந்த பெண்ணின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் கிறிஸ்தவர் என சொல்லிக்கொள்ளட்டும். சங்கிகள் வயிறு எரிவார்கள் என சொல்கிறார். ஆனால், துர்கா ஸ்டாலின் தான் வயிறு எரிவார். என்னையும், பாஜக தலைவர் அண்ணாமலையையும் திமுக ஐடி விங் தரக்குறைவாக இணையதளங்களில் விமர்சித்து வருகிறது. ஆனால், கருத்து சுதந்திரம் கூட இல்லாமல், சமூக வலைத்தளங்களில் யாராவது வீடியோ வெளியிட்டால் உடனடியாக கைது செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி. திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் ஆடு வெட்டுவோம் என்பதை ஏற்றுக்கொள்ள் முடியாது. அதனை முழுமையாக தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்ய கூடாது என அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு தமிழகத்தில் செயல்படுத்தாமல் இருக்கிறது. ஆனால், அந்த பெயரை கலைஞர் கைவினைஞர்கள் திட்டம் என பெயர் மாற்றம் செய்து செயல்படுத்துகிறார்க்ள். அந்த திட்டத்தின் பெயரில் விஸ்வகர்மா என இடம்பெற வேண்டும்.
ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமணர் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற சொல்லி உண்ணா விரதம் நடத்த இருக்கிறோம். ஜனநாயக முறைப்படி, இந்துக்கள் போராட்டம் நடத்தினால், அரசு அனுமதி வழங்குவது கிடையாது. ஆனால், மற்றவர்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். பிராமணர்களை இழிவுபடுத்துவோரையும் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.