“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை” என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்குப் பிறகாவது இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாது என தமிழக அரசால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியால் நடந்த சம்பவம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த மாணவிக்கு ஆதரவாக, கட்சி சார்பாக யாரும் எதையும் பேசக்கூடாது. தற்போது கூட பாஜக சார்பில் நாங்கள் இதை பேசவில்லை. பெண் என்ற முறையில் தான் பேசுகிறோம். மாணவிக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்.
மாணவியை அடையாளப்படுத்தும் விதமாக, முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டவர்களுக்கு முதலில் தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து மாநிலங்களுக்கு இடையே ஒப்பீடு செய்யக் கூடாது. நமது நாட்டில் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
திமுக ஆளும் தமிழகத்தில் பல பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, அதை மறைப்பதற்காக பக்கத்து மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளைக் கணக்கிடுகிறார்கள். தவறை தட்டிக்கேட்கும் தைரியம் திமுக அரசுக்கு இல்லை. திமுக மகளிர் அணி எங்கே போனது? கனிமொழி எங்கே சென்றார்? திமுக சார்பாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை. கடுமையான தண்டனைகள் கொடுக்காதவரை நமது சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.