மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அனுமதிக்கிறது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா நேற்று கூறியதாவது:-
மேற்கு வங்கத்தின் இஸ்லாம்பூர், சிதாய், சோப்ரா உள்ளிட்ட சில எல்லையோரப் பகுதிகள் வழியாக, வங்கதேச நாட்டவரை ஊடுருவ எல்லைப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கின்றனர். இதுதொடர்பான உறுதியான தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. மாநிலத்தைச் சீர்குலைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கை இருக்குமோ என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றுகிறது. எல்லைப் பகுதியில் வங்கதேச மக்களை ஊடுருவுவதற்கு அனுமதிப்பதோடு, ஏராளமான மக்களை பிஎஸ்எஃப் படையினர் சித்திரவதை செய்வதாகவும் தகவல் வந்துள்ளது.
வங்கதேச குண்டர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். எல்லையின் 2 பக்கங்களிலும் அமைதி நிலவவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் ஊடுருவுவதைத் தடுக்குமாறு மாநில போலீஸ் டிஜிபி ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.