“மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள், ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
தமிழகத்தில் மாணவி ஒருவருக்கு கொடுமை நடந்திருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ரார். அந்த நபர் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அந்த நபர், கைதுக்குப் பிறகு இன்னொரு நபர் குறித்தும் பேசியிருக்கிறார். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக, மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. அந்த செயலை கண்டிக்கும் விதமாக தமிழக ஆளுநரை சந்திக்க இருக்கிறோம்.
தமிழக அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் புரிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சென்னை அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவி விவரங்களுடன் எஃப்.ஐ.ஆர் வெளியே வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்களுக்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலும் பாஜக குரல் கொடுக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு தருகிறோம். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.