அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிய நீதி வேண்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது.
இதன்படி, பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு தரப்பில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஞானசேகரன் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அக்குழுவினர், ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தது. இ்தனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.