சீனாவில் அதிகரித்து வரும் ஹெச்எம்பிவி வைரஸ், உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் பதித்து இருக்கும் நிலையில், இந்த வைரஸ் புதிது இல்லை எனவும், கடந்த 2001 ஆம் ஆண்டே கண்டறியப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் ஹெச்எம்பிவி வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. சீனாவில் தற்போது குளிர் அதிகமாக உள்ள நிலையில், ஹெச்எம்பிவி காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான், இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதேபோல, சென்னையில் 2 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு என்பது புதிது இல்லை எனவும், கடந்த 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹெச்எம்பிவி என்பது புதிய வைரஸ் அல்ல என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. பல வருடங்களாக உலகம் முழுவதும் இந்த வைரஸ் இருந்து கொண்டே இருக்கிறது. ஹெச்எம்பிவி வைரஸ் காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.