சமீப காலங்களாகவே வாக்குப்பதிவு டேட்டா தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதாவது வாக்குப்பதிவு நாளில் ஒரு டேட்டா வருகிறது. அதற்கு மறுநாள் வேறொரு டேட்டா வருகிறது என்பதை பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கமளித்துள்ளார்.
இன்றைய தினம் டெல்லி சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இதற்காகத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பதிவான வாக்குகள் அனைத்தும் பிப். 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவு பெறுகிறது. டெல்லி தேர்தல் தொடர்பாக அறிவித்த தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் பேசும் போது தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கமளித்தார். குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவது, வாக்குப்பதிவு டேட்டா மாறுவது ஆகியவை தொடர்பாக அவர் சில முக்கிய விளக்கங்களை அளித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரை இங்குத் தேர்தலுக்கான விதிகள் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. அதுதான் நமது பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.. தேர்தல் கமிஷனில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு செயல்முறையிலும் அவ்வளவு விவரம் உள்ளன. ஓரிரு இடங்களில் தவறு நடந்தாலும் அதை ஒப்புக்கொண்டு சரி செய்தே வருகிறோம்” என்றார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவது ஆகியவற்றுக்கு கடுமையான விதிகள் பின்பற்றப்படுகிறது. இதில் முறைகேடுகளுக்கு வாய்ப்பே இல்லை. வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் 70 ஸ்டெப்கள் பின்பற்றப்படுகிறது.. அதில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதாவது ஒரு கட்சி ஆட்சேபனை தெரிவித்தாலும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை” என்றார்.
வாக்குப்பதிவு விகிதங்கள் மாற்றப்படுவதாகச் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதுவும் கடந்த மகாராஷ்டிரா தேர்தல் சமயத்தில் இது தொடர்பாகக் காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இது தொடர்பாக விளக்கமளித்த அவர், “வாக்குப்பதிவு விகிதத்தை யாராலும் மாற்ற முடியாது. அதற்குச் சாத்தியமே இல்லை.. அதேநேரம் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விவரங்கள் நள்ளிரவில் தான் கிடைக்கிறது. அது மறுநாள் தான் அப்டேட் ஆகிறது. இதில் முறைகேடு எதுவும் இல்லை.. 17C படிவத்துடன் டேட்டா பொருந்தியே போகிறது. அதுவே உங்களுக்குச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும்” என்றார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் இதனால் வாக்குச்சீட்டு முறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.