ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார்.
அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக செயல்பட்டு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் 14ம் தேதி காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கியபோதே 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். 2026 சட்டசபை தேர்தலில் தான் கட்சி இறங்கும் என்று அறிவித்தார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தேர்தல் உள்ளிட்டவற்றில் அவரது கட்சி போட்டியிடவில்லை.
தற்போது நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக விக்கிரவாண்டியில் நடத்தி முடித்து அடுத்தடுத்து நிர்வாகிகள் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகர் விஜய் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் தனது கட்சி நேரடியாக 2026 சட்டசபை தேர்தலில் தான் களமிறங்கும் என்பதில் உறுதியாக உள்ளதால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் இருந்து விலகி உள்ளது. இதனால் தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி என்பது நிலவ வாய்ப்புள்ளது.