பாஜகவின் ஏஜென்டாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் செயல்படுகிறார் என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூர் ஜவஹர் கடைவீதி பகுதியில் இன்று (ஜன.7-ம் தேதி) எம்.பி. செ.ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தொடர்ந்து 2-வது முறையாக அவையை அவமதித்து உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார். பாஜகவின் ஏஜென்டாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநருக்கு உரிய மாண்புடன் ரவி செயல்பட தவறி விட்டார்.
ஆளுநர் வசதிக்காக தமிழ்நாடு மக்கள் தங்களது கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் மாற்றிக் கொள்ள முடியாது. இன்று தேசிய கீதம் முதலில் பாடவேண்டும் என்பார். நாளை ஆளுநர் உரையை இந்தியில் எழுதிக் கொடுக்க சொல்வார். இதையெல்லாம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களும் செய்து கொடுக்க முடியாது. ஆளுநர் வைத்த சட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களும் ஆட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.