ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு!

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலின ஜோடிகள் பாலியல் ரீதியில் உறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என்று 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஒரே பாலின ஜோடிகள், தாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடியாது என தீர்ப்பளித்தது. மேலும், ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம்தான் இயற்ற வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை என தெரிவித்தது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.