தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் இருப்பதாகவும், கடன் வாங்குவதில் மட்டுமே சாதனை படைத்திருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில், தமிழ்நாடு அரசின் கடன் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்ட விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். காய்ச்சல் காரணமாக 3 நாட்களாக வராத நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி பேரவைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளையும் அமைச்சர்களிடம் கேட்டார். குறிப்பாக “யார் அந்த சார்” என்று அதிமுகவினர் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்வி குறித்த விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையில் காரசார விவாதம் நடந்தது. தொடர்ந்து வரி உயர்வு, மாதம் ஒருமுறை மின் கணக்கீடு வாக்குறுதி, நீட் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் என்று ஏராளமான விஷயங்கள் குறித்து பேசினார்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு மீது, அதிக கடன் குறித்தும் பேசினார். அதிக கடன் வாங்குவதில் மட்டுமே முதலிடத்தில் இருக்கிறீர்கள். கடனில் மட்டும் தான் சாதனை படைத்துள்ளீர்கள் என்று விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து அச்சம் தேவையில்லை. அதிமுகவின் பட்ஜெட் அளவு என்ன? தற்போதைய அரசின் பட்ஜெட் அளவு என்ன? தமிழ்நாட்டின் கடன் விகிதம் நிதிக் குழு நிர்ணயித்த அளவை விட குறைவாகவே உள்ளது. அரசு வாங்கும் கடனை ஜிடிபி உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பட்ஜெட்டின் போது தமிழ்நாடு அரசின் நேரடி கடன்களாக ரூ.8,33,361 கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.7,26,028 கோடியாக இருந்தது. அதேபோல் 2011-12 நிதியாண்டின் போது தமிழ்நாடு அரசின் கடன் ரூ.1,30,630 கோடியாக இருந்தது. இதன்பின் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகள் நிறைவடைந்த போது தமிழ்நாடு அணியின் கடன் ரூ.4,85,502 கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.