சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டு திருந்துவார்கள்: கனிமொழி எம்பி!

பெரியார் குறித்து சீமான் சர்ச்சையான கருத்தை பேசி வரும் சூழலில், சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என்று கனிமொழி எம்பி கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்று முன் தினம் கடலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசிய போது, உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா? என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டினை முற்றுகையிட முயன்ற போது, அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கும் மண்டபம் அருகே சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல்லாமல் சீமானுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பகுத்தறிவு – சமத்துவம் – பெண் விடுதலை – அறிவியல் வளர்ச்சி – தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.