சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 2 மசோதாக்களும் இன்று விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படுகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய 2 சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:-
பெண்களின் மேன்மை, வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு உருவாக்கி தருகிறது. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றியும் வருகிறது. இதன்மூலம், பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகிறது. தவிர, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூக பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது.
இத்தகைய சூழலில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதிலும் தமிழக அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.
இந்த அரசில்தான், 86 சதவீதத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2.39 லட்சத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ரயிலில் தள்ளிவிட்டு சத்யா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனை, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய குற்றங்களுக்கு பிஎன்எஸ் மற்றும் தமிழக அரசு சட்டங்களின் கீழ் ஏற்கெனவே தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க, பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் ஆகிய சட்டங்களில் மாநில சட்ட திருத்தத்துக்கும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் தமிழ்நாடு 1998-ம் ஆண்டு சட்ட திருத்தத்துக்கும், சட்ட மசோதாக்களை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தண்டனை விவரங்கள்: டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என உள்ளது. இதை, முதல் தண்டனை தீர்ப்பின்பேரில் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என நீட்டிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின்போது 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் என உள்ளது. தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் என விதிக்கப்படும்.
கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் விதிக்கப்படும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுட்கால சிறை தண்டனை. காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்கால சிறை தண்டனை. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை. 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.
பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. பெண்ணை பின்தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. இதே குற்றம் தொடர்ந்தால், அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டு முதல் ஆயுட்கால சிறை தண்டனை வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று விவாதத்துக்கு பிறகு, 2 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படுகின்றன.