கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற தலைசிறந்த நிறுவனங்களிலும், தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது என சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற கருப்பொருளில் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இத்துடன் அமைக்கப்பட்டிருந்த அயலக தமிழ்ச் சங்கங்கள், சுற்றுலா, மருத்துவம், தொழில் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழாவுக்கு முன்னிலை வகித்தார். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பரிக்கா, இலங்கை என 50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து அரசு பொறுப்புகளில் அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் பங்கேற்றனர். விழாவில் தமிழ்ச்சங்கங்களுக்கு விருதுகள், கனியன் பூங்குன்றனார் விருது, தமிழ்மாமனி பட்டம், பண்பாட்டு தூதுவர் விருது போன்ற விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கவுள்ளார்.
விழாவை தொடங்கி வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த்துறையை கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு உருவாக்கியது. தற்போது இதில் 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். உலகளவில் தமிழர்களின் உழைப்பும், ஆற்றலும் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கூகுள், மைரோசாப்ட், ஆப்பிள் என உலகின் அனைத்து தலைசிறந்த நிறுவனங்களிலும் தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது.
அதேபோல் வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு பிரச்சினை என்றால் அயலகத் தமிழர் நலத்துறை உடனே களத்தில் இறங்கி அவர்களை மீட்டெடுக்கிறது. சமீபத்தில் நடந்த ‘ரஷ்யா – உக்ரேன்’ போர், ‘பாலஸ்தீனம் – இஸ்ரேல்’ போர் போன்றவற்றில் கூட, அங்கு தங்கி படித்து வந்த நம் மாணவர்களை பத்திரமாக மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வந்திருக்கிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,500 பேரை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்திருக்கிறது. இதுபோன்ற சந்திப்புகள் நமக்கு இடையேயான தமிழ் உணர்வையும், பாசத்தையும் அதிகரிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.