ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அதிமுகவின் முடிவுக்கு அக்கட்சியின் முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடவில்லை என்று சொல்வது பணம் செலவாகும் என்று பணத்தை பாதுகாக்கவா? அப்படி இருந்தால் நீங்கள் 4 வருடம் ஆட்சியில் இருக்கும் போது கட்சி நிதி என்று உருவாக்கினீர்களே அது என்ன ஆனது? லாபம், நஷ்டம் கணக்கு பார்க்க நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா அல்லது கட்சி நடத்துகிறீர்களா?
கொங்குமண்டலம் உங்கள் கோட்டை என்று சொல்கிறீர்கள், வெற்றியோ தோல்வியோ ஆளும் கட்சியின் பணபலம், படைபலம், அராஜகங்களை எல்லாம் தாண்டி கடுமையாக போட்டியிட்டு ஒரு கணிசமான வாக்கு வங்கியை பெறவேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக என்று இருந்ததை தெரிந்தே மாற்று சக்தியான NDA கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கிறீர்கள். அப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கும் தற்போது பாஜகவுக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள். “அதிமுகவை இப்படியே தேர்தல்களில் போட்டியிடாமல் வைத்துக்கொள்கிறோம் அந்த இடத்தில் எல்லாம் நீங்கள் போட்டியிட்டு உங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளுங்கள்” என பாஜகவுடன் ஏதேனும் மறைமுக ஒப்பந்தம் வைத்துளீர்களா? அல்லது உங்களை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே கட்சி இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?. இவ்வாறு கேசி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வி.சந்திரகுமாரை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆனால் சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.