என் ஆட்சியில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின், இந்தியா மற்றும் தமிழ்நாடு தாண்டிய தமிழர்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தரப்பில் ஜன.11 மற்றும் 12 ஆகிய தேதிகளை அயலக தமிழர் தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று 4வது ஆண்டாக அயலக தமிழர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:-

இந்த விழாவிற்கு எத்திசையும் தமிழணங்கே என்று தமிழ்த்தாய் வாழ்த்தின் வரிகளை தேர்வு செய்து தலைப்பாக வைத்துள்ளோம். நாடு, எல்லை, கடல் என்று பிறபொருட்கள் நம்மை பிரித்தாலும், தமிழ் மொழி, தமிழர் என்று அனைவரும் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ் தான் நம்மை இணைக்கக் கூடிய தொப்புள் கொடி. அந்த உணர்வுடன் தாய் மண்ணாம் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அனைவரையும் உங்களில் ஒருவனாக வரவேற்கிறோம். தமிழர் திருநாளாம் பொங்கல் காலத்தில், மாபெரும் தமிழர் ஒன்றுகூடலை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்துள்ளார் அமைச்சர் நாசர்.

இங்கு கூடியிருக்க பலரின் முன்னோர்கள், 100, 200 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு காரணத்திற்காக தாய் மண்ணில் இருந்து சென்றிருப்பார்கள். இந்த பூமிப்பந்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று, ஓய்வறியா உழைப்பு, தியாகத்தால், கண்ணீர் சிந்தி நாடுகளை வளர்த்தார்கள். அவர்களால் தான் பாலைகள் சோலைகளாக மாறியது. அலைக்கடலில் கூட துறைமுகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பேச்சின் போது உங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்ப வரலாறு நினைவில் வரும். அப்படிப்பட்ட தமிழ்த் தியாகிகளின் வாரிசுகளான உங்களை உறவாக அரவணைக்க கூடிய பாங்கு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. நான் இருக்கிறேன்.. அதனைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.. நீங்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை.. தமிழ்நாடும் உங்களை மறக்கவில்லை. இதுதான் தமிழினத்தின் பாசம். அதனால் தான் அயலக மண்ணில் குடியிருந்தாலும், நீங்களும் தமிழை வளர்க்கிறீர்கள்.

அயலக மண்ணிலும் தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்கள், வழித்தோன்றல்களுக்கு நன்றி கூறவும், அங்கீகாரம் வழங்கவும் அயலகத் தமிழர்களை நாளினை கொண்டாடுகிறோம். அமெரிக்காவிற்கு சென்றபோது அயலகத் தமிழர்கள் காட்டிய பாசத்தை மறக்க முடியாது. எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் தருகின்றனர். அயலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ கருத்தரங்கு உதவும். வேர்களைத் தேடி திட்டம் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

என் ஆட்சியில் உருவான திட்டங்களில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி வேர்களைத் தேடி திட்டம். உலகின் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்சனை என்றாலும் அரசு தேடி சென்று உதவும். இந்த திட்டத்தின் மூலமாக இன்னலுக்கு உள்ளானவர்களின் புன்னகையை மீட்டு தந்திருக்கிறோம். சொல் அல்ல செயல் தான் என்னுடைய ஸ்டைல். 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.10 கோடியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அயலகத் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்போம். பூமியில் எங்கு இருந்தாலும் உங்கள் வேர், மொழி, மண், மக்கள், உறவுகளை மறக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.