அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில், இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, ஏற்கனவே இதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் வைத்தது. அதற்கு நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நகல் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், சென்னை ஐகோர்ட் உத்தரவு இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி தரப்பு, இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் இன்று ஆஜராக இயலாததால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினர். அதற்கு நீதிபதி, இந்த வழக்கு இப்போது ஒத்திவைக்கப்படுகிறது, அடுத்தமுறை வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும், இதற்கு மேல் அவகாசம் கோரவோ அல்லது ஒத்திவைக்கவோ கோரக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும், தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
முன்னதாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.