நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று முன்தினம் மாலை தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா தொடக்க விழா நடைபெற்றது. தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர். இதில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், பெரியவர்களுக்கு மரியாதை தருவதுதான் உண்மையான தமிழரின் நாகரிகம், கலாச்சாரம். நீங்கள் வாழும்போது நல்லவனாக போற்றப்படாமல் இருக்கலாம். ஆனால், நல்லவனாக வாழ்ந்து மறையும்போதுதான், மகத்தான தலைவராக சமூகத்தால் உணரப்படுவீர்கள்.

வெற்றி, தோல்வி என்பது தேர்வுகளில் பெறும் வெற்றி மட்டுமே என்று கருதக்கூடாது. வாழ்வில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். இறைவன் தந்த இந்த பிறப்பை ஒட்டுமொத்த சமூகத்துக்குப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவில் நதிகளை இணைக்காமல், தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. அப்படி ஒரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும். இது அரசியல் அல்ல. தியாகராஜர் சபையில் கூறினால் பலிக்கும் என்பதற்காகத்தான் இதை கூறுகிறேன். இசை என்பது மொழி, ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பறப்பட்டது. நல்ல இசையைக் கேட்டால், மனமும், ஆன்மாவும் திருப்தி அடையும். இசை இந்த மண்ணை விட்டு ஒரு போதும் போகாது. 800 கீர்த்தனைகளில் 700 கீர்த்தனைகள் ராமாரைப் மட்டுமே பற்றி உள்ளது. அனுமனுக்குப் பிறகு, ராமரை அதிகமாக துதித்தவர் தியாகராஜர்தான். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சபா பொருளாளர் கணேஷ், செயலாளர் பழனிவேல், ராஜாராவ், அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.