டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார்.
டெல்லியில் லுட்யன்ஸ் பங்களா பகுதியில் (எல்பிஇசட்) உள்ள 24, அக்பர் சாலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 1978-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிலையில், எல்பிஇசட் பகுதியிலிருந்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2005-06-ல் உத்தரவிட்டது. இதையடுத்து, 9ஏ கோட்லா சாலையில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அடிக்கல் நாட்டினர். பல்வேறு காரணங்களால் தாமதமாக வந்த இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணி சமீபத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார். அப்போது கட்சியின் கொடியேற்றப்பட்டு, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த புதிய கட்டிடத்துக்கு ‘இந்திரா பவன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “கட்சித் தலைவர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் இந்திரா பவன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொலைநோக்கு பார்வை கொண்டிருக்கிறது என்பதை இந்த கட்டிடம் பிரதிபலிக்கிறது. அதேநேரம், நாட்டின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பை வடிவமைத்த தனது கடந்த காலத்துக்கு மரியாதை செலுத்துகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-
மிகவும் முக்கியமான நேரத்தில் புதிய தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.
ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும். இந்த காங்கிரஸ் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்.
குற்றங்களை விசாரிக்க வேண்டிய மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவின் கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி இருக்கின்றன. நமது நாட்டில் இருவிதமாக கருத்து மோதல்கள் இருக்கின்றன. அவை அரசியலமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா பேரவைத் தேர்தலில் தகவல்களைத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.