தமிழக அரசு சார்பில் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழக அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கருணாநிதி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவள்ளுவர் திருநாளையொட்டி அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், விருதுகள் வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (நேற்று) நடைபெற்றது.

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமுவுக்கும், 2024-ம் ஆண்டுக்கான அண்ணா விருது எல்.கணேசனுக்கும், காமராஜர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவுக்கும், பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும் பாரதிதாசன் விருது கவிஞர் பொன்.செல்வகணபதிக்கும் திருவிக விருது டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், கிஆபெ விஸ்வநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும், வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொரு விருதும் தலா ரூ.2 லட்சம் பரிசும், ஒரு சவரன் தங்க பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்கான பெரியார் விருதை விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் விருதை விசிக மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமாருக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விருது தலா ரூ.5 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி விருதை தமிழறிஞர் முத்து வாவாசிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விருது ரூ.10 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், சிவ.வீ. மெய்யநாதன், மா. மதிவேந்தன், தலைமைச் செயலர் .நா.முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலர் விஜயராஜ் குமார், செய்தித் துறை செயலர் வே. ராஜாராமன், செய்தித்துறை இயக்குனர் இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.