அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு அடிப்படையில் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு நிர்ணயிக்கப்படும் என்ற நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பணப் பயன்களை மாற்றியமைக்க 8 வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
7வது ஊதியக் குழு 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது, அதன் பதவிக்காலம் 2026ல் முடிவடையும் நிலையில், 8வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 8வது ஊதியக்குழு ஆணையத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று வைஷ்ணவ் கூறினார்.