இந்தியா – பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக, தத்தமது சிறைகளில் வாடும் சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தானிடம் அளித்திருக்கும் சிறைக்கைதிகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள சிறைகளில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பாகிஸ்தான் அளித்திருக்கும் பட்டியலில், இந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்று கருதும் 49 பொதுமக்களும், 633 மீனவர்களும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு தூதரகங்களுக்கு இடையே 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில், இரு நாடுகளும், தங்களது சிறைகளிலிருக்கும் அண்டை நாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதற்கிடையே, பாகிஸ்தான் சிறையிலிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்து உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்திய மீனவர்கள் 536 பேர் மற்றும் பொதுமக்கள் 3 பேரை, முன்கூட்டியே விடுதலை செய்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த பட்டியல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.