இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தியநிலையில், விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் சோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.
இந்த சூழலில் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றிபெற்றதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.