ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் “மிகப்பெரிய ஊழல்” திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “இது ஒரு போலியான திட்டம் என்று உச்ச நீதிமன்றமும் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய மோசடி என்பது நாடு முழுவதில் இருந்தும் வெளிவந்துள்ளது. தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசு மாறிய பிறகு நடத்தப்படும் விசாரணை மூலம்தான் இந்த திட்டம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லியில் அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட டெல்லி அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆம் ஆத்மி அரசு அதனை புறக்கணித்தது. டெல்லியில் பாஜக அரசு அமைந்ததும், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஆயுஷ்மான் பாரத் திட்டம் டெல்லியில் செயல்படுத்தப்படும்.

டெல்லியில் ஆம் ஆத்மி நடத்தும் மொஹல்லா கிளினிக்குகள் ஊழலுக்கானவை. மோசடி ஆய்வக சோதனைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளன. இது குறித்தும், முதல்வரின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள மருந்துகள் குறித்தும் விசாரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சீவனி திட்டம், டெல்லி மக்களின் நலனைப் புறக்கணித்து, அதன் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஓர் அரசியல் கருவியாக மட்டுமே செயல்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், மக்கள் நலனுக்கான திட்டமாக செயல்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி ஆட்சியைப் போல், அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.