மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு எனப்படும் யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யுஜிசி விதிகளை திரும்பப் பெறக் கோரி ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டிருந்தது. இந்த வரைவு விதிகள் அனைத்தும் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்களே நியமிக்கலாம்; அதுவும் கல்வித் துறை சாராத நபர்களைக் கூட துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என புதிய யுஜிசி வரைவு விதியில் இடம் பெற்றிருந்தது. துணைவேந்தர்கள் நியமன குழுவில் மாநில அரசின் பிரதிநிதி இடம் பெற்றிருந்ததும் நீக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில்தான் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது மாநில சட்டசபைகளில் யுஜிசி விதிகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அத்துடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல் தேவையற்றது; நான்கு ஆண்டு கலை/அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை M.Tech., அல்லது M.E., படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டிற்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்; Multiple Entrance Multiple Exit (MEME) என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு: தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை MEME சீர்குலைக்கிறது; கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோள் அடிப்படையில் கேரளா மாநில சட்டசபையிலும் யுஜிசியின் வரைவு விதிகளுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளா சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டைத் தொடர்ந்து 2-வது மாநிலமாக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.