பரந்தூர் விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த ஜி ஸ்கொயர் நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்கள் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ரியஸ் எஸ்டேட் நிறுவனம். தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக சில மின்னணு ஊடகங்கள், பரந்தூரில் எங்கள் நிறுவனம் பெரிய நிலப்பகுதிகளை வைத்திருப்பதாக தவறான தகவல்களை பரப்பி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் எங்கள் நிறுவனத்திற்கு எந்த நிலமும் இல்லை. எங்கள் நிறுவனத்துக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை. இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் முன்பு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே சரி பார்த்துவிட்டு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மீது தனிப்பட்ட முறையிலும் அரசியல் காரணங்களுக்காகவும் தவறான தகவல்களை வெளியிட்டால் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் 2ஆவது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கிய போது இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நிலங்களை அழித்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் 910 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இவர்களை சீமான், பிரேமலதா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் போய் பார்த்தனர்.
அந்த வகையில் பரந்தூரில் உள்ள விவசாயிகளை சந்தித்து பேச தவெக தலைவர் விஜய், பரந்தூர் செல்ல அனுமதி கேட்டிருந்தார். ஆனால் போராட்டக் களத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரந்தூரில் திருமண மண்டபத்தில் உள்ள திறந்தவெளியில் விவசாயிகளை அவர் சந்தித்தார். அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றபடியே விஜய் பேசுகையில், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக் கூடாது என நான் சொல்லவில்லை. பரந்தூரில் அமைக்கக் கூடாது என்றுதான் நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எட்டுவழிச்சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அந்த நிலைப்பாட்டைதானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு , ஆளும் கட்சியானால் எதிர்ப்பா? மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதை நான் வரவேற்கிறேன். அதைத்தானே பரந்தூர் பிரச்சினையிலும் செய்திருக்க வேண்டும். இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என விஜய் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பரந்தூரில் இருப்பதாக சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதை மறுத்து உண்மை விளக்க அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையை ஜிஸ்கொயர் வெளியிட்டுள்ளது.