“மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசு நிதியை செலவு செய்து செயல்படுத்தி வருகிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று (ஜன.22) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முதல்வருக்கு செங்கோல் வழங்கினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. ரூ.51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதில் சிவகங்கை அருகே நகரம்பட்டியில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர் வாளுக்குவேலி சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார். ரூ.164 கோடியில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் சிவகங்கையில் வேலுநாச்சியார் மணிமண்டபம் அருகே ரூ.1.07 கோடியில் மன்னர்கள் மருது சகோதரர்கள் சிலை அமைக்கவும், வீறுகவியரசர் முடியரசனுக்கு காரைக்குடியில் ரூ.50 லட்சத்தில் சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 53,039 பயனாளிகளுக்கு ரூ.161.11 கோடியில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சிவகங்கை மண்ணுக்கு வந்தால் சிலிர்ப்பு ஏற்படுகிறது; வீரம் பிறக்கிறது. விடுதலை போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், குயிலி வாழ்ந்த மண்தான் சிவகங்கை. வீரத்துக்கு அடிப்படையான தமிழர்களின் தொன்மையை உலகுக்கு உறைக்கும் கீழடி இங்குள்ளது. வீரமும், புகழும் கொண்டு இந்த மாவட்டத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பாக வளர்த்தெடுக்கிறார். நான் நம்பி பொறுப்பு கொடுக்கும் பட்டியலில் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளார்.
சிவகங்கை சீமையை வளர்த்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.1,853 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணி விரைவில் முடிவடைய உள்ளது. சங்கரபதிகோட்டை புனரமைப்பு, ரூ.130 கோடியில் காரைக்குடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் 500 குடியிருப்புகள், ரூ.35 கோடியில் ஐடி பூங்கா, ரூ.100 கோடியில் சட்டக்கல்லூரி, சிறாவயலில் விடுதலை போராட்ட வீரர் தியாகி ஜீவானந்தத்துக்கு நினைவு மண்டபம், ரூ.62 கோடி மதிப்பில் செட்டிநாடு வேளாண் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகள் முடிவடைந்தும், நடைபெற்றும் வருகின்றன.
மேலும் மூன்றரை ஆண்டுகளில் 91,265 பேருக்கு ரூ.38.52 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியையும் நாடிச் சென்று உதவுவது தான் திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும், எல்லாம் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அண்ணணாக, தம்பியாக, மகனாக, தந்தையாக, உறவாக இருந்து வருகிறேன். சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டப்படும். திருப்பத்தூருக்குள் வாகனங்கள் வருவதை தடுக்க திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை, ரூ.30 கோடியில் காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும் ஆகிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருகிறோம். அதனால் தான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன செய்தோம் என்று மேடைகளில் புள்ளிவிவரத்தோடு பேசி வருகிறோம். இதையெல்லாமல் எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் வாய்க்கு வந்தபடி, பொத்தம் பொதுவாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்து புலம்பி வருகிறார். இருபது சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார். இந்த குற்றச்சாட்டுகளை அவரால் நிரூபிக்க முடியுமா? திண்ணையில் உட்கார்ந்து வெட்டி பேச்சு பேசுவதுபோல், வாய்க்கு வந்தபடி அவர் பேசலாமா? நாங்கள் அரசாங்கத்தில் இருப்பதால் மக்களிடம் உண்மையை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 389-யை நிறைவேற்றியுள்ளோம். மீதியுள்ள 116 வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். அரசிடம் மொத்தம் 34 துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் 2 அல்லது 3 திட்டங்களை தான் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதை நான் ஒத்துக் கொள்கிறேன். இதை தெரிந்தே, தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசி வருகிறார். மேலும் அவர் மற்றொரு கட்சி தலைவர் அறிக்கையை அப்படியே ‘காப்பி’, ‘பேஸ்ட்’ செய்து, அதை வெளியிட்டுள்ளார். அதை பிரபல பத்திரிக்கைகள் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.
அதிமுக ஆட்சியில் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய நாள், அதற்கான அரசாணை எண், பயனாளிகள் விவரங்களை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட தயாரா? முழுசா 10 ஆண்டுகள் தமிழகத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியதை மக்கள் மறந்திருப்பர் என நினைக்கின்றனர். மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் செல்போன், ஏரோபார்க், 10 ஆடை அலங்கார பூங்காக்கள், 58 வயது ஆடவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம், பொது இடங்களில் இலவச ‘வைஃபை’. இப்படி வெற்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தமிழக வளர்ச்சியை பாழாக்கினர்.
தற்போது தமிழகம் திவாலாகிவிட்டது என்று புது புரளியை கிளப்பி வருகின்றனர். தவழ்ந்து, தவழ்ந்து தமிழகத்தை தரைமட்டத்துக்கு அனுப்பியவர்கள், பொய்யாலும், அவதூறுகளாலும் வீழ்த்த முடியுமா ? என்று பார்க்கின்றனர். திமுக ஆட்சியில் உபரி வருவாய் மாநிலமாக விட்டுசென்ற தமிழகத்தை 2013 முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. தொடர்ந்து அதிக பற்றாக்குறை மாநிலமாக மாற்றிவிட்டு சென்றனர். நெருக்கடியாக இருந்த தமிழகத்தை நாங்கள் மீட்டுள்ளோம். அதிமுக ஆட்சி காலத்தில் அவர்களுக்கு இணக்கமான மத்திய அரசு இருந்தது. அப்போது எதையும் கேட்டு பெறவில்லை. பதவிக்காக மட்டும் புதுடெல்லிக்கு சென்றனர்.
ஆனால் அதே மத்திய அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசாக பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கிறது. மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறி தான் தமிழகத்தை முன்னேற்றி இருக்கிறோம். மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசு நிதியை செலவு செய்து செயல்படுத்தி வருகிறோம். அதிமுக கையாளாகாத நிர்வாக சீர்கேடு ஒருபுறம், மத்திய அரசின் பாராமுகம் மற்றொருபுறம் இருந்தும் முன்னேற்றி வருகிறோம். தமிழகத்தை மத்திய அரசு எப்படி வஞ்சிக்கிறது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதை எதிர்க்கட்சித் தலைவர் காதில் வாங்குவதில்லை. சாதாரணமாக தமிழகம் திவாலாகிவிட்டதாக கூறுகிறார். திவாலாக வேண்டும் என்பது தான் அவரது எண்ணமா? என்று கேட்க தோன்றுகிறது. அரசு செய்யும் செலவு எல்லாம் வெட்டி செலவு என்கிறார். அவர் கூறுவது மகளிர் உரிமை தொகையையா? காலை உணவு திட்டத்தையா?. எதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். எந்த செலவு செய்தால் மக்களுக்கு நன்மை என்பது எங்களுக்கு தெரியும். உங்களது கடந்தகால நிர்வாகத்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம். நீங்கள் போடுகிற எல்லா கணக்கும் தப்பு கணக்கு தான்.
மக்கள் எங்களோடு செயல்பாடுகளையும், நலத்திட்டங்களையும் கணக்கு போட்டு முதல் மதிப்பெண்கள் கொடுக்கின்றனர். எங்களுக்கு அதுபோதும். திமுக ஆட்சிக்கு 13 அமாவாசைகள் தான் உள்ளது என்று சொல்லி காலாண்டரை கிழித்து வருகிறார். தற்போது அது தான் அவருடைய வேலையாக உள்ளது. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கை கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களை என்னி திட்டங்களை செல்படுத்துகிறோம். சிவகங்கை மக்களின் வரவேற்பை பார்க்கும்போது உதயசூரியன் ஒளியில் தொடர்ந்து தமிழகத்தில் திமுக தான் ஆளும். மக்களுக்காக என்றும் உழைப்போம். ஒவ்வொரு வீட்டுக்கும் திமுக அரசின் சாதனை சென்று கொண்டிருக்கிறது. அது தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோவி.செழியன், சாமிநாதன், கார்த்திசிதம்பரம் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.