ஈஷா யோகா மையம் மீதான பாலியல் புகார்கள் விசாரிக்கப்படும்: காவல் துறை!

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஈஷா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கோவை மாவட்ட போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஈஷா மையம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். என் புகாருக்கு போலீஸார் மனு ரசீது வழங்கவில்லை. என் புகாரை விசாரிக்கவும் இல்லை.

உச்ச நீதிமன்றம் லலிதா குமாரி வழக்கில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர் உடனடியாக புகார் அளிக்க வேண்டும், அப்புகாரின் பேரில் போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை என உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஈஷா யோக மையம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்யவும், சிறப்பு குழு அமைத்து குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விசாரிக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் புகார் தொடர்பாக போலீஸார் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை வாதிடுகையில், “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கடந்தாண்டு அக்டோபர் மாதம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மனுதாரர் ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களும் மனுதாரரை சந்தித்து ஆவணங்களை வழங்கியுள்ளனர். அந்தப் புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சிகரமானது. அதில் உள்ள அனைத்தையும் நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. பாலியல் வழக்குகளில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். இப்புகார்களை விசாரிக்க மூத்த பெண் காவல் அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்” என்றார்.

போலீஸ் தரப்பில், “குற்றம் தற்போது நடந்திருந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்துக்காக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க காலதாமதம் ஏற்பட்டது ஏன்? அதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். ஈஷோ யோகா மைய பாலியல் வன்கொடுமை தொடர்பாக கோவையில் ஏற்கெனவே 2 புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரரின் புகாரும் கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்புகார் மீது முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ள பாலியல் சம்பவங்கள் 5 முதல் 10 ஆண்டுக்கு முன்பு நடைபெற்றவை. இதனால் போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும். வழக்குகளின் நிலை குறித்து அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜன.30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.